இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், வரும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் தனது ஆசான் மகேந்திர சிங் தோனியுடனான தனிப்பட்ட உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தோனி தமக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தாலும், அவரிடம் தொலைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதாகக் கூறி ஆச்சரியப்படுத்தினார்.
தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் படி, தற்போதைய தருணத்தில் வாழ்வதையே விரும்புவதாகவும், கைப்பேசி பயன்பாட்டைத் தான் வெகுவாகக் குறைத்துக் கொண்டதாலேயே அவருக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
தோனியும் எளிதில் யாருடைய அழைப்பையும் ஏற்கமாட்டார் என்பதால், நேரில் சந்திப்பதையே தான் முன்னுரிமைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். உலகக்கோப்பை குறித்துப் பேசிய பண்ட், சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுடன் சேர்த்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் அணியை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய உடல் தகுதி சிக்கல்களால் அணியில் இடம்பெறாத பண்ட், தனது இடத்தைப் பிடித்துள்ள இஷான் கிஷன் மற்றும் இதர இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தையும் பாராட்டியுள்ளார்.
