தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று (பிப். 5) கூடி, மாநிலத்தின் ‘இடைக்கால பட்ஜெட்டுக்கு’ (Interim Budget) அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 34,327 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

​தேர்தல் ஆண்டின் கடைசி பட்ஜெட் என்பதால், மக்களைக் கவரும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை அதிகரிப்பு, புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் 18-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் முதலீடுகளுக்குச் சலுகைகள் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்த பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியைத் தக்கவைக்க திமுக அரசு போடும் இந்த ‘பட்ஜெட் ஸ்கெட்ச்’, தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.