இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஐசிசி-க்கு கோடிக்கணக்கில் வருமானம் தரும் ஒரு மிகப்பெரிய வணிகம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச தொடர்களில் மற்ற அணிகள் குலுக்கல் முறையில் வெவ்வேறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டும் திட்டமிட்டு ஒரே பிரிவில் சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறாத சூழலில், ஐசிசி தொடர்கள் மூலம் மட்டுமே அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், இத்தகைய ‘முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட’ நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் சாடியுள்ளார். இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அட்டவணைகள் மாற்றப்படுவதால், மற்ற நாடுகள் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக புட்சர் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்ற பாகிஸ்தானின் முடிவு, ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், பாகிஸ்தான் தன் கையில் இருக்கும் ஒரே அதிகாரத்தை இச்சமயத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பெரிய அணிகளுக்காக விதிகளை வளைக்கும் போக்கு தொடர்ந்தால், அது கிரிக்கெட் விளையாட்டின் சமநிலையை முற்றிலுமாகப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.