சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக (Commentator) களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அந்த வாய்ப்பைத் தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார். விளையாட்டு ஒளிபரப்பாளர் ஜட்டின் சப்ரூ உடனான உரையாடலில், வர்ணனை செய்வது என்பது ஒரு கடினமான கலை என்றும், அது தனது இயல்புக்கு ஒத்து வராத ஒன்று என்றும் அவர் விளக்கியுள்ளார். குறிப்பாக, நவீன வர்ணனையில் புள்ளிவிவரங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆனால் தமக்குத் தமது சொந்தக் கேரியர் புள்ளிவிவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

​தவிர, மைதானத்தில் விளையாடும் வீரர்களை விமர்சிப்பதில் உள்ள ஒரு மெல்லிய கோடு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். ஒரு அணி தோற்கும்போது அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியது வர்ணனையாளரின் கடமை என்றாலும், அதை நாகரிகமாகவும், எந்த ஒரு வீரரின் மனதையும் புண்படுத்தாமலும் சொல்வது மிகப்பெரிய கலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்த விரும்பாததால், வர்ணனைப் பணி தமக்குச் சரியாக இருக்காது எனத் தோனி தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே ஒருபுறம் ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது பக்குவமான அணுகுமுறையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.