ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை, 2021-ல் தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல்கள் வெடித்தன. குறிப்பாக, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததாகக் கூறி, 2023-ல் அ.தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி நடந்தபோது, “அண்ணாமலையைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி” என அ.தி.மு.க நிபந்தனை விதித்தது.
இதனை ஏற்று அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னரே அ.தி.மு.க மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்தது. இருப்பினும், மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
மாறாக, வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது தனது தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி, தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் அண்ணாமலை விலகியுள்ளார். இது பா.ஜ.க மேலிடத்திற்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாகப் பேச்சுகள் எழும் நிலையில், டெல்லி பா.ஜ.க தலைமை அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
