பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நேரடி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் “துரோகி” என்றும் “நாட்டின் எதிரி” என்றும் விமர்சித்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள், இன்று அவையின் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியாக மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு கடந்து சென்றார். அவரைக் கண்டதும் அங்கிருந்தவர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இதோ ஒரு துரோகி பக்கத்திலேயே செல்கிறார். அந்த முகத்தைப் பாருங்கள்” என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

தொடர்ந்து அமைச்சரை நோக்கி, “வணக்கம் சகோதரரே, எனது துரோகி நண்பரே! கவலைப்படாதீர்கள், நீங்கள் மீண்டும் காங்கிரசுக்குத்தான் வருவீர்கள்” என்று கிண்டலாகக் கூறியபடி, கை குலுக்கத் தனது கரத்தை நீட்டினார்.

ராகுல் காந்தியின் இந்தச் செயலால் ஆவேசமடைந்த அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார். பதிலுக்கு ராகுல் காந்தியைப் பார்த்து, “நீங்கள்தான் நாட்டின் எதிரி” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ரவ்னீத் சிங் பிட்டு காங்கிரஸில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் அவர் பாஜகவில் இணைந்ததைச் சுட்டிக்காட்டியே ராகுல் காந்தி இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்தார். நாட்டின் உயரிய சபை வளாகத்திலேயே இரு முக்கியத் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.