புதுச்சேரி அருகே திருமண தோஷம் நீங்கப் பரிகாரம் செய்வதாகக் கூறி, ஒரு சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற போலி ஜோசியர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அருகே வசிப்பவர் கோமளவள்ளி. இவரது வீட்டிற்கு வந்த இருவர், தாங்கள் ஜோசியர்கள் என்றும், வீட்டில் உள்ள திருமணத் தடைகள் நீங்கப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என்றும் நம்ப வைத்துள்ளனர். இவர்களது பேச்சை நம்பிய கோமளவள்ளியிடம், சமையல் புளியில் நகைகளை வைத்துப் பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என நாடகமாடியுள்ளனர்.

அதன்படி, புளியில் ஒரு சவரன் தங்க நகை மற்றும் ரூ. 18,600 ரொக்கப் பணத்தை வைத்துப் பூஜை செய்வது போலப் பாசாங்கு செய்த அந்த நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் நகை மற்றும் பணத்தைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது நகை மற்றும் பணம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோமளவள்ளி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னராசு மற்றும் மிக்கேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஒரு சவரன் நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.