இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்க வேண்டாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேச அணி தனது போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இக்கோரிக்கையை நிராகரித்ததோடு, வங்கதேசத்தை தொடரிலிருந்தே நீக்கி, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பளித்தது. ஐசிசி-யின் இந்த பாரபட்சமான முடிவைக் கண்டிக்கும் விதமாகவே, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்குப் பல முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி கிரிக்கெட் உலகில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது: “இந்த உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒருவேளை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்திக்கும் சூழல் உருவானால், அப்போதும் கோப்பையைத் துறந்துவிட்டு பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷித் லத்தீப் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தானின் முடிவை நியாயப்படுத்திப் பேசினாலும், பீட்டர்சன் முன்வைத்துள்ள தர்க்கரீதியான கேள்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. லீக் போட்டியைப் புறக்கணிப்பது எளிது, ஆனால் இறுதிப்போட்டியில் இத்தகைய முடிவை எடுத்தால் அது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.