2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வரும் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த முடிவு ஒரு போட்டியுடன் முடிந்துவிடாது என்றும், எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷித் லத்தீப் மேலும் கூறியதாவது, இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இது புதிதல்ல. இத்தகைய முடிவை நாங்கள் கடந்த காலத்திலேயே எடுத்திருக்க முடியும். தற்போது ஐசிசி (ICC) விதிக்கும் அபராதங்கள் குறித்தோ அல்லது வாரியத்திற்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்தோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை.

இந்த விவகாரம் பிப்ரவரி 15 போட்டியுடன் முடிந்துவிடும் என்று நான் கருதவில்லை. இனி வரும் காலங்களிலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிகளுக்கு உலக அளவில் மிகப்பொன்னான வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஐசிசி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகப்பெரிய ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒருவேளை திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறவில்லை என்றால், ஒளிபரப்பு நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என லத்தீப் சுட்டிக்காட்டினார்.

“உண்மையான முதலீட்டாளர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு தீர்வு எட்டப்படாவிட்டால், அது உலக கிரிக்கெட்டிற்குப் பேரழிவாக அமையும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை இத்தகைய முடிவுகளை அரசு திரும்பப் பெறுவது இயல்பான ஒன்றுதான். அரசுகளின் தலையீட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கூட இந்தச் சூழல் மாறலாம்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.