தில்லி பகார்கஞ்ச் பகுதியில் ஆறாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பரின் பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் தெரியவந்தது.

சிறுமியின் தாய் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் தந்தை இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவில் தந்தை தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கடந்த 15 நாட்களில் நான்கு ஐந்து முறை இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே தனது தாயையும் தன்னையும் தந்தை அடிக்கடி கடுமையாகத் தாக்கி வந்ததால் பயத்தின் காரணமாக உண்மையை மறைத்ததாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த தந்தையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று முக்கிய ஆதாரங்களைத் திரட்டியுள்ள நிலையில் போலீஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.