உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் பாபுகர் பகுதியைச் சேர்ந்த நேஹா என்ற இளம்பெண், அடுத்தடுத்து நான்கு பேரைத் திருமணம் செய்து கொண்டு லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து பெறாமலேயே முறையற்ற வகையில் அடுத்தடுத்த திருமணங்களைச் செய்த நேஹா, ஒவ்வொரு முறையும் தனது கணவர் குடும்பத்தினர் மீது பொய்ப் புகார்களை அளித்து மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவரது நான்காவது கணவரான சூரஜ் என்பவர் காவல் கண்காணிப்பாளரை (SP) அணுகி அளித்த புகாரில், “திருமணமான 3 மாதங்களில் நேஹா என்னுடன் சண்டையிட்டு பிரிந்து சென்றார்; என்னிடமிருந்து சுமார் ரூ.3.25 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்ட அவர், தற்போது கூடுதல் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் தராவிட்டால் வரதட்சணை கொடுமை மற்றும் துன்புறுத்தல் வழக்குப் போடுவதாக என்னை மிரட்டுகிறார்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நேஹாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் அளித்த புகாரில், தனது மகனுக்கும் நேஹாவுக்கும் திருமணம் செய்த சில நாட்களிலேயே, அந்தப் பெண் வீட்டார் ரூ.11 லட்சம் கேட்டு மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். வேறு வழியின்றி ரூ.11 லட்சத்தை வழங்கிய பின்னரும், வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் நேஹா ஓடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோல மொத்தம் நான்கு குடும்பங்களை ஏமாற்றி, சமூகத்தையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி நேஹா கைவரிசை காட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினரின் புகார்களைக் கேட்ட எஸ்பி, இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருமணத்தின் பெயரால் அரங்கேறியுள்ள இந்தத் தொடர் மோசடி மற்றும் மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
