பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மூன்று மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்தவர் தேவ ஜெசிப்பிரியா (22). இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
தனியாக வசித்து வந்த தம்பதியினரிடையே திருமணமான சில நாட்களிலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நகை மற்றும் பணம் தொடர்பாக வசந்தராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த வசந்தராஜ் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தேவ ஜெசிப்பிரியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் வசந்தராஜைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கடலூர் அரசு மருத்துவமனைக்குத் திரண்டு வந்த தேவ ஜெசிப்பிரியாவின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்தனர். மேலும், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக மாற்றிப் பதிவு செய்ய வலியுறுத்தி, கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், டி.எஸ்.பி சரவணன் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
