திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் நகை மற்றும் பணத்துடன் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 19 வயது மகளுக்கு, அவரது உறவுக்கார இளைஞர் ஒருவருடன் கடந்த மாதம் 21-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் திடீரென மாயமானார்.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே, வீட்டில் இருந்த பீரோவைச் சோதித்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4.75 லட்சம் ரொக்கப் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து அந்த இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “தனது மகள் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மகளை மீட்டுத் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாயமான இளம்பெண் மற்றும் அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர்.