லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான 3-வது டி20 போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
தொடக்க வீரர் சைம் அயூப் (56 ரன்) மற்றும் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்க, இறுதியில் சதாப் கான் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதனையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸின் (5 விக்கெட்) சுழலில் சிக்கிச் சீர்குலைந்தது.
ஸ்டாய்னிஸ் (23) மற்றும் கேமரூன் கிரீன் (22) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 16.5 ஓவர்களில் வெறும் 96 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை அதன் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியைத் தழுவச் செய்து, 3-0 எனத் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
