இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்துப் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடியான அறிவிப்பை இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி விலகிய வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இத்தொடரை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த ‘ஹை-வோல்டேஜ்’ போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும், அந்தப் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐசிசி-யின் (ICC) நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி தனது லீக் போட்டிகளில் விளையாட இலங்கை செல்ல விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால் அந்தப் போட்டிக்கான புள்ளிகள் இந்தியாவுக்கு வழங்கப்படுவதுடன், பாகிஸ்தான் வாரியத்தின் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
