ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் வாழ்வா-சாவா போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இளையோர் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், வேதாந்த் திரிவேதியின் (68 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். குறிப்பாக ஆயுஷ் மாத்ரே மற்றும் கிலன் படேல் ஆகியோரின் சுழலில் சிக்கிய பாகிஸ்தான், 46.2 ஓவர்களில் வெறும் 194 ரன்களுக்குச் சுருண்டது.
இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதே சமயம், இந்தப் படுதோல்வியால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியது.
