அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாகர் பிரசாத் என்ற இளைஞர், தனது கார்ப்பரேட் வேலையை இழந்த பிறகு தெருவில் தேநீர் விற்று ஒரு நாளில் சுமார் 31 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பீகாரின் பாட்னா அருகே உள்ள பார் என்ற ஊரைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சோர்ந்துவிடாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில் இந்திய முறைப்படி மசாலா தேநீர் மற்றும் அவல் உப்புமா ஆகியவற்றை விற்பனை செய்யத் தொடங்கினார்.

இவரது கடையில் ஒரு கப் தேநீர் இந்திய மதிப்பில் சுமார் 780 ரூபாய்க்கும், ஒரு தட்டு அவல் உப்புமா 1,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கிய இந்தத் தொழில், தற்போது அவருக்கு நல்ல வருமானத்தையும் மனநிறைவையும் தந்துள்ளதாகப் பிரபாகர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கார்ப்பரேட் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுத் தனது விருப்பப்படி சுதந்திரமாகச் செயல்படுவதே மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கும் அவர், ஒரு நாளில் மட்டும் சுமார் 341 டாலர் வரை வருமானம் ஈட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிக வாடகை மற்றும் செலவுகளைச் சமாளிக்க இத்தொழில் உதவியாக இருந்தாலும், இது ஒரு நிலையான வருமானம் அல்ல என்றும், எதிர்காலத்தில் இதையே பெரிய அளவில் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

கடின உழைப்பும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காத பண்பும் எங்கும் வெற்றியைத் தரும் என்பதற்குப் பிரபாகரின் இந்த வாழ்க்கை பயணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.