அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ள நிலையில் தனது அரசியல் வாழ்வை நிலைநிறுத்தப் போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி சென்ற பிறகு, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக – பாஜக கூட்டணியில் எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என ஓபிஎஸ் துடிக்கிறார். இதற்காக பாஜக தலைமை மற்றும் டிடிவி தினகரன் மூலமாக எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவரை மீண்டும் சேர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்து வருகிறார்.

​கட்சியில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, டிடிவி தினகரனின் குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடட்டும் என ஒரு தரப்பு சமரசம் பேசுகிறது. ஆனால், பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவரை மீண்டும் உள்ளே விடுவது சரியாக இருக்காது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி இறங்கி வராவிட்டால், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் ஓபிஎஸ் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.