நெல்லையில் நடைபெற்ற தேமுதிக முகவர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை; எங்கு உரிய மரியாதை கிடைக்கிறதோ அங்குதான் தேமுதிக இருக்கும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். குறிப்பாக ஊடகங்களைச் சாடிய அவர், “உங்கள் டிஆர்பி-யை (TRP) உயர்த்துவதற்காகத் தேமுதிக குறித்துத் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியுமே இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், எங்களை மட்டும் ஏன் நச்சரிக்கிறீர்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

​தொடர்ந்து பேசிய அவர், தனது தொண்டர்களின் நலன் கருதி ஒரு தாயாகச் சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுப்பேன் என்று உறுதியளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளால் டென்ஷனான பிரேமலதா, “எங்கள் குடும்ப ரகசியங்களை வெளியே சொல்ல முடியாது” என்று பதிலடி கொடுத்தார். மேலும், 2026 தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர், டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கத் தனது கூட்டணி கட்சியிடம் வலியுறுத்தப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்றும் மழுப்பலாகப் பதிலளித்தார்.