பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட், டீச்சர்ஸ் காலனியில் வசித்து வரும் ஷாலினி என்ற 31 வயது இளம்பெண் (மென்பொருள் பொறியாளர்), கடந்த ஜனவரி 26 அதிகாலை 6.54 மணியளவில் தனது வீட்டின் முன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது அண்டை வீட்டைச் சேர்ந்த அமரேஷ் ரெட்டி என்பவரது வளர்ப்பு நாய், திடீரென கேட்டைத் தாண்டி வெளியே பாய்ந்து வந்து அந்தப் பெண்ணைத் தாக்கியது.
அந்த நாய் இளம்பெண்ணின் கழுத்து, முகம், கைகள் மற்றும் கால்களில் சரமாரியாகக் கடித்துக் குதறியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரைக் காப்பாற்ற முயன்ற வழிப்போக்கர் ஒருவரையும் அந்த நாய் கடித்துள்ளது.
படுகாயமடைந்த ஷாலினி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்ட தையல்களைப் போட்டுள்ளனர்.
நாயின் உரிமையாளர் அமரேஷ் ரெட்டி, தனது நாயைச் சரியாகப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ஷாலினியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பி.என்.எஸ் (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
