சாலையில் நடக்கும் விபத்துகளில் தவறு யார் மீது என்பதை நிரூபிப்பது எப்போதும் சவாலான ஒன்று. ஆனால், இப்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு காரின் ‘டேஷ்கேம்’ கேமரா உண்மையை ஊர் உலகிற்குப் போட்டு உடைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் மணிக்கு 79 கி.மீ வேகத்தில் (90 கி.மீ வேகக் கட்டுப்பாடு உள்ள சாலை) சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் ஓரத்தில் இருந்து பெண் ஒருவர், வாகனங்கள் வருகிறதா என்பதைக் கூடப் பார்க்காமல் திடீரென சாலையைக் குறுக்கே கடக்க முயன்றார்.

கார் டிரைவர் சுதாரித்து பிரேக் பிடித்தும், அந்தப் பெண் மீது கார் லேசாக மோதியது. இதில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். காரில் கேமரா இருந்ததால், டிரைவர் சரியான வேகத்தில் வந்ததும், பெண் தான் கவனக்குறைவாக ஓடி வந்ததும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

விபத்து நடந்தவுடன் டிரைவர் பதறிப்போய்க் காரை விட்டு இறங்கி, அந்தப் பெண்ணுக்குத் தண்ணீர் கொடுத்து உதவினார். அந்தப் பெண்ணின் உறவினர்கள் வரும் வரை அங்கேயே இருந்து அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார். “டேஷ்கேம் இல்லையென்றால், இந்நேரம் என் மீது வீண் பழி விழுந்திருக்கும்” என அந்த நபர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.