நாட்டின் தலைநகரான டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள பஜன்புரா பகுதியில், கடந்த ஜனவரி 18-ம் தேதி மாலை 6 வயது சிறுமி ஒருவரை 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் உணவளிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஆளில்லாத கட்டிடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரத்த வெள்ளத்தில் வீடு திரும்பிய சிறுமி, முதலில் கீழே விழுந்துவிட்டதாகக் கூறிய நிலையில், பெற்றோரின் தொடர் விசாரணையில் மூன்று சிறுவர்கள் கைகளைக் கட்டி வாயைப் பொத்தித் தன்னை பலத்தகாரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் 10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள 14 வயது சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சிறுமியின் தந்தை கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
