​தமிழக அரசியல் களம் இப்போது ஒரு “கூட்டணி பூகம்பத்தை” நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கைகோர்த்துள்ள நிலையில், அவரது தந்தையான டாக்டர் ராமதாஸ் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்புமே தீவிரம் காட்டி வருவதாகச் செய்திகள் கசிந்தன. ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், “பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று மிகக் கறாராகச் சொல்லிவிட்டதால், ராமதாஸ் அவர்களை திமுக-வில் சேர்ப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

இதனால், தனித்து விடப்பட்டுள்ள ராமதாஸ் தரப்பு, விஜய்யின் தவெக-வுடன் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், “ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை” என்ற செய்திக்குத் தமிழக வெற்றி கழகம் (தவெக) தரப்பிலிருந்து ஒரு அதிரடி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் தரப்பு உட்பட எந்தவொரு கட்சியுடனும் தாங்கள் முறையான கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்று தவெக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“யாரும் இன்னும் எங்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை” என்று தவெக தரப்பில் சொல்லப்பட்டாலும், சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் அவர்கள் விஜய்யை “தேன் கூட்டைச் சுற்றும் தேனீக்கள் போல இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள்” என்று புகழ்ந்து தள்ளியிருப்பது ஏதோ ஒரு “சிக்னல்” போலவே தெரிகிறது. 2026-ல் யார் யாருடன் கை கோர்க்கப் போகிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும் போலயே!