பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையான பிரியா பாரதி என்பவர், தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், தீராத உடல்நலக்குறைவு காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, “அப்பா, அம்மா… உங்கள் மகள் தோற்றுவிட்டாள், என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் எழுதியுள்ள வரிகள் பார்ப்பவர் நெஞ்சை கனக்கச் செய்கிறது. மேலும், தான் வாங்கிய 5.5 லிட்டர் பாலுக்கான பணத்தை தனது பையில் இருக்கும் பணத்திலிருந்து கொடுத்துவிடுமாறு அவர் கேட்டுக்கொண்ட விதம், மரணத்தின் வாசலிலும் அவர் காட்டிய நேர்மையை உணர்த்துகிறது.
இருப்பினும், பிரியாவின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவரது கணவர் தீபக் ராஜ் மற்றும் புகுந்த வீட்டினர் பிரியாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், வரவிருக்கும் அவரது தம்பியின் திருமணத்திற்குப் பணம் கொடுக்கக் கூடாது என அவர்கள் தடுத்ததே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்றும் பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தனது கணவர் ஈமச்சடங்கு செய்யக்கூடாது என்றும், தனது மகளே இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் பிரியா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தற்போது போலீசார் பிரியாவின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
