திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒருபோதும் நீடிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, விசிகவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ராமதாஸை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மீண்டும் என்டிஏ  கூட்டணியை நோக்கிப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது திமுக அரசின் மின்கட்டணக் கொள்கையை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறையை திமுக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று ராமதாஸ் சாடியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மாறி மாறிப் பேசி காலத்தைக் கடத்தி வருவதாகவும், தற்போது வரை ஒரு சில பகுதிகளில் மட்டுமே சோதனை முறையில் பணிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 2026 சட்டசபைத் தேர்தல் கோடைகாலத்தில் வரும் என்பதால், அப்போது மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் கோபத்தை வாக்குச்சாவடியில் காட்டுவார்கள் என்றும் திமுக அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.