தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மற்ற கட்சிகளை விட தி.மு.க தொடர்ந்து பல மாநாடுகளை நடத்தி வருவதாகவும், மகளிர் முன்னேற்றத்திற்குத் தி.மு.க ஆட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எத்தனை புதிய சக்திகள் திரண்டு வந்தாலும் தி.மு.க-வையும் தமிழகத்தையும் யாராலும் அசைக்க முடியாது என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், மணிப்பூர் வன்முறை மற்றும் குஜராத் பில்கிஸ் பானு விவகாரம் போன்றவற்றை மேற்கோள் காட்டி பா.ஜ.க அரசை விமர்சித்தார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்வதாகவும், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்திற்குள் நுழைய நினைக்கும் பாசிஸ்டுகள் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தனது உரையில் பேசினார்.