ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் மரியா சபாடீ ஹொலியூ என்பவர் மைசூருவில் தங்கி யோகா பயின்று வந்த நிலையில், அவரிடம் ஒருதலைக் காதல் கொண்ட ராகுல் தத்தா என்ற இளைஞர் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மைசூரு வந்த மரியா, அங்குள்ள லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யோகா பயிற்சி பெற்று வந்தார்.

அவருடன் பயின்று வந்த மைசூருவைச் சேர்ந்த ராகுல் தத்தா என்பவர் மரியாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததோடு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், தனக்கு ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் காதலன் இருப்பதாகக் கூறி மரியா அந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தத்தா, கடந்த 17-ஆம் தேதி மரியா தனது ஸ்கூட்டரில் கிருஷ்ணராஜா புலே வார்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று மோதியுள்ளார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மரியா படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குக் போராடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவாக இருந்த ராகுல் தத்தாவை லட்சுமிபுரம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். ஒருதலைக் காதலால் வெளிநாட்டுப் பெண் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.