மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள விஐபி சாலையில், ஒரே மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்தப் பகுதியில் சென்ற மற்றொரு வாகன ஓட்டி எடுத்த இந்தக் காணொளியில், ஒரு ஸ்ப்ளெண்டர் ரக பைக்கில் இளைஞர்கள் சிலர் ஹேண்டில் பாரின் மீதும், மற்றவர்கள் ஒருவருக்கொருவர் மேலேயும் அமர்ந்து கொண்டு சர்க்கஸ் செய்வது போலச் செல்வது பதிவாகியுள்ளது.

அதிவேகமாகச் சென்ற அந்த பைக்கில் இருந்த எவருமே தலைக்கவசம் அணியாததுடன், மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கைகளை அசைத்துக் கொண்டு கூச்சலிட்டபடி சென்றனர். பாதுகாப்பு மிகுந்த விஐபி சாலையில் இத்தகைய விதிமீறல்கள் நடந்திருப்பது போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ஜிதேந்திர சிங், வைரல் காணொளி மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இத்தகைய ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.