தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளால் மிரட்டப்படுவதாகவும், ஆனால் எந்தப் பயமுறுத்தலுக்கும் பணியாமல் கம்பீரமாகப் பயணிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தகுந்த மரியாதை மற்றும் உரிய பதவிகளை வழங்கும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த தொண்டர்களைப் பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பதே தனது லட்சியம் என்று கூறிய அவர், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தொண்டர்களுக்கு அதிக வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என்றார்.

பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன் என்றும் தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்தார்.