கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் நாகேந்திரப்பா ஷிரூர் (38) என்பவர், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார்.
மேலும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு விஷ பாட்டிலை அவரிடமிருந்து பறித்ததுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக பவ்ரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் தற்போது அவர் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை முயற்சி குறித்த விசாரணையில், கடந்த காலங்களில் அனேகல் காவல் நிலையம் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக நாகேந்திரப்பா மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையின் போது காவல்துறையினர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விதான் சவுதா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
