வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, 23 வயது இளைஞர் ஒருவர் அவர் தூங்கிக் கொண்டிருந்த கடைக்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  சஞ்சல் பௌமிக் (23) என்ற இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜனவரி 23) தான் வேலை பார்த்து வந்த கராஜில் (Garage) தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர், கராஜின் கதவைப் பூட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சஞ்சல் உயிருக்குப் போராடி அலறியும், அவர் இறக்கும் வரை அந்த நபர் வெளியே நின்று கவனித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த கராஜில் தங்கி வேலை பார்த்து வந்த சஞ்சல், மிகவும் எளிமையானவர் மற்றும் யாருடனும் பகை இல்லாதவர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தந்தை இறந்த நிலையில், நோயுற்ற தாய், மாற்றுத்திறனாளி அண்ணன் மற்றும் தம்பி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் சஞ்சல் ஒருவரே காப்பாற்றி வந்தார். தற்போது அவரது மறைவால் அந்தக் குடும்பம் திக்கற்று நிற்கிறது.

சஞ்சலுக்கு யாரிடமும் தனிப்பட்ட பகை இல்லாததால், இது மத ரீதியிலான வெறுப்பால் செய்யப்பட்ட திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் சந்தேகிக்கின்றனர்.

வங்கதேசத்தில் அண்மைக்காலமாக இந்துக்கள் இலக்கு வைக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஷரியத்பூர் மாவட்டத்தில் கோகன் தாஸ் என்ற மருந்துக்கடை உரிமையாளர் கும்பலால் தாக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். அதேபோல், ஆடை நிறுவன ஊழியர் தீபு சந்திர தாஸ் என்பவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்தத் தொடர் சம்பவங்கள் வங்கதேசத்தில் வசிக்கும் இந்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க பாஜக பிரிவு, இது திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை என்று கவலை தெரிவித்துள்ளது.