சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அடிப்படை விதிகளில் மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க முடியாது என்று இருப்பதைச் சுட்டிக்காட்டியது. இருப்பினும், உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஏற்கனவே பலமுறை மூன்றாவது பிரசவத்திற்கும் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை நீதிபதிகள் நினைவு கூர்ந்தனர்.

​இதனையடுத்து, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டு காலத்திற்குப் பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும், இனிமேல் இது போன்ற கோரிக்கைகளுக்காக யாரும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதற்காக, அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் துறைகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இந்த உத்தரவை அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் அனுப்பி, முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது அரசுப் பெண் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.