பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமையகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் அக்கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய செங்கொட்டையன், நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் ஹீரோ என்று புகழாரம் சூட்டினார்.

மற்ற கட்சிகள் பணம் கொடுத்து மக்களைக் கூட்டத்திற்கு அழைப்பதாகவும், ஆனால் விஜய்யின் கொள்கைக்காக மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து ஆர்வமுடன் கூடுவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக போன்ற கட்சிகள் பெரும் கூட்டம் கூடும் என்று கூறி தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்தார்.

விஜய்யின் இயக்கத்தில் பணம் இல்லாமல் கூட வெற்றி பெற முடியும் என்றும், அவர் கைகாட்டுபவர்களே வருங்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவார்கள் என்றும் உறுதிபடக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் அனைவரும் சமமான பொருளாதார முன்னேற்றத்தைப் பெற வேண்டும் என்பதே விஜய்யின் நோக்கம் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் செங்கொட்டையன் தனது உரையில் குறிப்பிட்டார்.