கொல்கத்தா – கௌஹாத்தி இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில், ரயிலை கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் மற்றும் சிமெண்ட் தூண்களை இளைஞர்கள் சிலர் அடுக்கி வைக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த தடைகளைக் கண்ட ஓட்டுநர், சாதுரியமாக ரயிலை பாதியிலேயே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்காகச் செய்யப்பட்ட இந்த விபரீதச் செயலுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.