சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள செவ்னி கிராமத்தில், 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் குரங்கு ஒன்று கடத்திச் சென்று கிணற்றில் வீசிய நிலையில், அக்குழந்தை அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் சுனிதா ரத்தோர் தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, திடீரெனக் கூரையின் வழியே இறங்கிய குரங்கு ஒன்று, அவர் மடியில் இருந்த குழந்தையைப் பறித்துக்கொண்டு தப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சத்தமிட்டும், பட்டாசுகளை வெடித்தும் குரங்கைத் துரத்தினர். இதில் மிரண்டு போன அந்த விலங்கு, தான் தூக்கிச் சென்ற குழந்தையை அருகில் இருந்த ஒரு திறந்தவெளி கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியது.
உடனடியாகச் செயல்பட்ட கிராம மக்கள், வாளியைப் பயன்படுத்தி வெறும் மூன்று நிமிடங்களில் குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்தச் சமயம் அருகில் ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த செவிலியர் ராஜேஸ்வரி ரத்தோர், உடனடியாகக் குழந்தைக்குத் தேவையான முதலுதவிகளையும் செயற்கை சுவாசத்தையும் வழங்கினார்.
குழந்தை அணிந்திருந்த டயப்பர் ஒரு பாதுகாப்பு கவசம்போலச் செயல்பட்டு, அக்குழந்தையைத் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கச் செய்ததே உயிர் பிழைக்க முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தை, அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
