அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், திருமணமான பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா என்ற அந்தப் பெண் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, ரஹீம் (என்ற நோமன்) அங்கு வந்து தகராறு செய்துள்ளார்.  பேசுவதை தமன்னா புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த ரஹீம், மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து அவரை சரமாரியாகத் தாக்கினார்.

இந்த கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்தப் பெண் போராடியும், அவரது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவருக்கு, பேக்கரி உரிமையாளர் துணியால் கட்டுப்போட்டு உதவி செய்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில், தமன்னாவும் ரஹீமும் முன்னதாக நண்பர்களாக இருந்தது தெரியவந்தது. தமன்னா தனது முதல் கணவரைப் பிரிந்த பிறகு ரஹீமுடன் பழகியுள்ளார். ஆனால், அவர் மொஹ்சின் என்பவரை மறுமணம் செய்துகொண்ட பிறகு, ரஹீமுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஹீம், தமன்னாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
முன்னதாக, தமன்னாவின் உறவினர்களை ரஹீம் கத்தியால் தாக்க முயன்றது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வளவு வன்முறை பின்னணி கொண்ட ஒருவர், பொது இடத்தில் பெண்ணைத் தாக்கியது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
<a href=”http://

“>
நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் இருந்தும் குற்றங்கள் குறையவில்லை என்றும், காவல்துறையினர் குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமன்னா அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரஹீமைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.