இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ள 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்துவிட்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2007-ம் ஆண்டு முதல் அனைத்து உலகக் கோப்பைகளிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், “2007-ல் இந்த தொடர் அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு முறையும் களத்தில் இருந்திருக்கிறேன்.
ஆனால், இந்த முறை முதல்முறையாக உலகக் கோப்பையை வீட்டில் இருந்து பார்ப்பது மிகவும் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். ஒரு தொடரில் நீங்கள் அங்கமாக இல்லை என்பதை உணரும்போதுதான் அதன் எதார்த்தம் புரியும். இருப்பினும், மைதானத்தில் ஏதோ ஒரு வகையில் நான் நிச்சயம் இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், கேப்டனாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் குறித்துப் பேசிய அவர், யாரையும் திருப்திப்படுத்துவதை விட, ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும் போது அதற்கான தெளிவான காரணத்தை அவரிடம் விளக்குவதுதான் முக்கியம் என்றும் தனது கேப்டன்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
