அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் ஐசிசி-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, 24 மணி நேரத்திற்குள் இறுதி முடிவை அறிவிக்குமாறு கெடு விதித்தது. இதற்கு பதிலளித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம், இந்தியாவில் விளையாட முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதனால் 200 மில்லியன் ரசிகர்களை ஐசிசி இழக்க நேரிடும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் இந்த பிடிவாதத்திற்குப் பின்னால் ஒரு அரசியல் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில், ஐபிஎல் தொடரில் இருந்து அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி நீக்கியது.
இதனால் கோபமடைந்த வங்கதேச வாரியம், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுப்பதாகத் தெரிகிறது. தற்போது வங்கதேசம் விலகியுள்ளதால், அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை உலகக்கோப்பையில் சேர்க்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
மேலும், வங்கதேச அணி விளையாட வேண்டிய போட்டிகள் அனைத்தும் அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படும் என்றும், அந்நாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய வருவாயை ஐசிசி நிறுத்தி வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
