மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால், பரபரப்பான சாலையில் திறந்திருந்த பாதாளச் சாக்கடை குழிக்குள் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த திங்கள்கிழமை காலை சுமார் 11:30 மணியளவில் படா சராபா சந்தைப் பகுதியில் கழிவுநீர்க் குழாய்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எவ்வித எச்சரிக்கைப் பலகைகளோ அல்லது தடுப்புகளோ வைக்காமல் குழியின் மூடியைத் திறந்து வைத்திருந்தனர். அந்த வழியாகச் சென்ற இளம் பெண், குழி திறந்திருப்பதை கவனிக்காமல் எதிர்பாராதவிதமாக அதற்குள் விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பெண்ணைச் சாக்கடையில் இருந்து மீட்டனர்.
இந்த விபத்தில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, அசுத்தமான கழிவுநீரில் விழுந்ததால் உடல்நலப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தூர் மாநகராட்சியின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே பாகீரத்புரா பகுதியில் நிகழ்ந்த ஒரு பாதிப்பில் 25 பேர் உயிரிழந்தும், மாநகராட்சி நிர்வாகம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
