மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில், கணவர் வேலை முடிந்து தாமதமாக வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த தாய் தனது ஒரு வயது மகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 34 வயது மதிக்கத்தக்க தினக்கூலி தொழிலாளிக்கும், அவரது 30 வயது மனைவிக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த நபர் வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்ததே இந்தத் தகராறிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இருவருக்கும் இடையிலான சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது ஒரு வயது பெண் குழந்தையைத் தாக்கத் தொடங்கினார். குழந்தையின் முகம், வயிறு, கை மற்றும் தலைப் பகுதிகளில் அந்தப் பெண் கொடூரமாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பச்சிளம் குழந்தை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையைக் கொலை செய்த தாயைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாதாரண குடும்பத் தகராறில் பெற்ற மகளையே தாய் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
