உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களிலேயே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஒரு மாதமாக மகாராஜ்பூர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி வந்த சச்சின், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவருக்கும் அதே பகுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, தான் வெளியூருக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற சச்சின், நள்ளிரவில் எதிர்பாராத விதமாகத் தனது அறைக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது தனது மனைவி இரு இளைஞர்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அதனைத் தனது கைபேசியில் படம்பிடிக்க முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் ஸ்வேதா தூண்டுதலின் பேரில் அந்த இளைஞர்கள் சச்சினைத் தாக்கியதாகவும், தகவல் அறிந்து வந்த போலீசார் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் சமாதானமாகப் போக விரும்புவதாகக் கூறி சச்சின் விடுதலையானார்.
இருப்பினும், வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்த இரு இளைஞர்களையும் விடுவிக்கக் கோரி ஸ்வேதா தனது கணவரை வற்புறுத்தியதாகவும், அவர்களுக்கு ஆதரவாகப் பேசி சச்சினைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சச்சின், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைப் போர்வையால் சுற்றி அறையிலேயே போட்டுவிட்டுச் சென்றார்.
மறுநாள் காலையில் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உயிரிழந்த ஸ்வேதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சச்சினைத் தொடர் விசாரணையில் வைத்துள்ளனர்.
