தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை என்பது தற்போது கட்டுக்கடங்காமல் போயுள்ளது. வெறும் கடிப்பதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் செல்லும் வாகனங்களைத் துரத்திச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதில் இவை ‘மரணக் குழிகளாக’ மாறி வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒரு நபர் தெருநாய்களால் விபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பல உயிரிழப்புகளும், ஏராளமானோருக்குக் கடுமையான எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ள நிலையிலும், அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை ஒரு கூட்டம் தெருநாய்கள் ஆக்ரோஷமாகத் துரத்துகின்றன. நாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, அந்தப் பெண்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓரமாக நின்றிருந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. குழந்தையுடன் அந்தப் பெண்கள் கீழே விழுந்த காட்சி பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. குழந்தைகளைக் கூட வேட்டையாடத் துணியும் இந்தத் தெருநாய்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஏன் இன்னும் தயங்குகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.