நாம் மற்றவர்களிடம் இருந்து கவனத்தை எதிர்பார்ப்பதும், அது கிடைக்காதபோது மனவேதனை அடைவதும் மனித இயல்புதான். ஒருவர் நமது மெசேஜைப் புறக்கணிக்கும்போதோ அல்லது நமது முயற்சியைக் கண்டு கொள்ளாதபோதோ ஏற்படும் வலி, வெறும் ஏமாற்றம் மட்டுமல்ல. சமூகப் புறக்கணிப்பு மற்றும் நிராகரிப்பால் மனதிற்கு ஏற்படும் காயமானது, உடலுக்கு ஏற்படும் வலியைப் போன்ற உணர்வையே மூளையில் ஏற்படுத்துகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மனிதர்கள் அடிப்படையில் சமூகச் சார்ந்த வாழும் உயிரினங்கள் என்பதால், பிறரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தேவை இயல்பாகவே நமக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளை வைத்தே பலர் தங்கள் சுயமதிப்பைத் தீர்மானிக்கத் தொடங்குகின்றனர். இது கிடைக்காத போது, தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னம்பிக்கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மற்றவர்கள் நம்மை எப்போதும் கவனிக்காததற்கு அவர்கள் வேலையாக இருப்பதோ அல்லது வேறு சிந்தனையில் இருப்பது கூடக் காரணமாக இருக்கலாம். எனவே, கவனம் கிடைக்காத ஒவ்வொரு முறையும் நம்மைக் குறைந்தவராக நினைக்க வேண்டிய அவசியமில்லை. பிறரின் கவனமும் அங்கீகாரமும் மட்டுமே நமது திறமையையோ அல்லது சுயமதிப்பையோ அளவிடும் அளவுகோல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிப்புற அங்கீகாரத்தை மட்டுமே நம்பியிருக்காமல், நமக்குள்ளேயே சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வது அவசியமாகும். மனநிறைவுப் பயிற்சிகள், நமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் மற்றும் உண்மையான அன்பைப் பொழியும் மனிதர்களுடனான தொடர்புகள் ஆகியவை பிறர் தரும் கவனத்தைச் சார்ந்து வாழும் உணர்ச்சியைக் குறைக்க உதவும்.

மற்றவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டும் என விரும்புவதில் தவறில்லை; ஆனால், அவர்களின் கவனத்தால் மட்டுமே நமது வாழ்க்கை வரையறுக்கப்படுவதில்லை. உங்களை நீங்கள் உள்ளிருந்து நேசித்து மதிக்கத் தொடங்கும் போது, மற்றவர்களின் புறக்கணிப்புகள் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது; மேலும் நீங்கள் அதிக மனஉறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவராக மாறுவீர்கள்.