சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த ஒரு கனடா நாட்டு நபர், ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் (S$860,000) சம்பளம் வாங்கி வந்தார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர், மனைவி மற்றும் 4 குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதிலிருந்து தப்பிக்க, 2023 அக்டோபரில் தனது கைநிறையச் சம்பளம் தரும் வேலையைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு கனடாவுக்குத் தப்பிச் சென்றார். வேலையில்லை என்றால் பணம் கொடுக்கத் தேவையில்லை என்பது அவரது கணக்காக இருந்தது.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் குடும்ப நல நீதிமன்றம், அந்த நபரின் தந்திரத்தை உடைத்தது. “வேலையை ராஜினாமா செய்தது உங்கள் தனிப்பட்ட முடிவு, அது குடும்பப் பொறுப்பில் இருந்து உங்களை விடுவிக்காது” என்று நீதிபதி கண்டித்தார். மேலும், அவர் வேலையை விட்ட காலம் முதல் கனடாவில் புது வேலைக்குச் சேரும் வரை, பழைய சிங்கப்பூர் சம்பளத்தின் அடிப்படையிலேயே கணக்கிட்டு, சுமார் 4 கோடி ரூபாய் (S$6,33,916) நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப நினைத்தவருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பலத்த அடியாக விழுந்துள்ளது.
