தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அழைப்பு விடுக்கப்பட்ட 90 பேரில் 60 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் கே.எஸ்.அழகிரி போன்ற முக்கிய நிர்வாகிகள் 30 பேர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவர்கள் கூட்டத்திற்கு வராமல் தவெக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட சென்சார் விவகாரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது, காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், செல்வப்பெருந்தகை தரப்பு திமுக கூட்டணியை ஆதரித்த நிலையில், இளம் தலைவர்கள் பலர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவது திமுக தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு விஜய்க்கு ஆதரவாகச் செயல்படுவது, தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலையும், புதிய கூட்டணி மாற்றத்திற்கான அறிகுறியையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
