ராமேஸ்வரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காதல் விவகாரத்தால் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேணிக்கரை வலசை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரும், சசிகலா என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர்.
இவர்களது திருமணத்திற்கு சசிகலாவின்குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாண்டியின் குடும்பத்தினரை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலாவிற்கு அவரது பெற்றோர் கட்டாயத்தின் பேரில் உறவுக்கார இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு பெண் குழந்தை இருந்தபோதிலும், சசிகலாவால் தனது பழைய காதலன் பாண்டியை மறக்க முடியவில்லை. இருவரும் ரகசியமாகத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். சசிகலாவின் கணவர் வேலை நிமித்தமாக சென்னை சென்றிருந்த சமயம் பார்த்து, சசிகலா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இருவரையும் கண்டுபிடித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சசிகலாவை அறிவுரை கூறி அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.கணவனுடனும் வாழ முடியாமல், காதலனுடனும் சேர முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தந்தை வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதே சமயம், பெங்களூருக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றிருந்த காதலன் பாண்டி, ஊர் திரும்பும் வழியில் சசிகலாவின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மனவேதனை தாங்க முடியாமல், கிருஷ்ணகிரிமாவட்டம் தர்மபுரி சுங்கச்சாவடி அருகே சாலையோர மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஐந்து ஆண்டுகள் கடந்தும் மாறாத காதலால் இரு உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
