மதுரையில் யூடியூப் வீடியோவில் வந்த குறிப்புகளைப் பின்பற்றி, நாட்டு மருந்து கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வது ஆபத்தானது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

அதாவது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி (19), மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். உடல் எடையைக் குறைப்பதில் ஆர்வம் காட்டிய கலையரசி, இதற்காக யூடியூப்பில் உள்ள பல்வேறு மருத்துவக் குறிப்புகளைப் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், யூடியூப்பில் பார்த்த வீடியோ ஒன்றின் அடிப்படையில், மதுரை கீழமாசி வீதியில் உள்ள ஒரு நாட்டு மருந்து கடைக்குச் சென்று சில மூலிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர், அந்த மருந்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவருக்குத் தலைச்சுற்றல் மற்றும் கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பினார். ஆனால், இரவு நேரத்தில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்து மாணவிக்கு அதிக அளவில் வயிறு வலி ஏற்பட்ட நிலையில் வயிற்றுப்போக்கு உடன் இரத்தம் வந்ததாகவும் இதன் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் கலையரசி மயக்கமடைந்தார். உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கலையரசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கலையரசியின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: “இணையதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து சுய மருத்துவம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. மாணவி என்ன வகையான மருந்தைச் சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். உரியப் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக் கூடாது என கடைக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர். மேலும் உடல் எடையைக் குறைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.