தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று பரபரப்புடன் தொடங்கியது. ஆளுநர் உரை வாசிக்கப்படாமல், அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அவை தொடங்கியதும் வழக்கம்போல ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உரையை வாசிக்க மறுத்த ஆளுநர், “அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதமே பாடப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது உரையை நிகழ்த்தாமலேயே அவர் அவையிலிருந்து வெளியேறினார்.
ஆளுநரின் இந்தச் செயலால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, “ஆளுநர் தனது உரையை வாசிக்காவிட்டாலும், அச்சிடப்பட்ட ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட்டதாகவே அவை குறிப்பில் ஏற்றப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்குப் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார். நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவர் அவமதித்துவிட்டார்.” ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அந்தப் பதவி மீது எங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அந்தப் பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை அளிப்பதில் கலைஞர் வழியில் வந்த இந்த அரசு என்றுமே தவறியதில்லை.”
“அரசியல் சட்ட விதிகளின்படி ஆளுநர் உரை நிகழ்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், கடந்த காலங்களைப் போலவே இப்போதும் அவர் நடந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது.” மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
