ஈராக் நாட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து முழுமையாக வெளியேறியுள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது.
அந்தச் சமயத்தில் ஈராக்கின் அல் அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்தைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், அதனைத் தனது முக்கியப் போர் மையமாகப் பயன்படுத்தி வந்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் படைப்பிரிவு, தற்போது அங்கிருந்து முழுவதுமாக விலகிக்கொண்டதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் ஈராக் ராணுவம் தனது வசப்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஈராக் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தனது படைகளைக் குறைத்து வந்தது.
இதன் இறுதிக்கட்டமாக தற்போது அனைத்துத் துருப்புகளும் வெளியேறியுள்ள நிலையில், இனி அமெரிக்கா உடனான உறவு என்பது நேரடி ராணுவத் தலையீடாக இருக்காது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சார்ந்த உறவாக மட்டுமே இருக்கும் என்றும் ஈராக் தெளிவுபடுத்தியுள்ளது.
