கர்நாடக மாநிலக் குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டிஜிபி-யாகப் பணியாற்றி வரும் கே. ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்திலேயே சீருடையுடன் இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 47 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ தொகுப்பில், அலுவலகத்தின் தேசியக் கொடி மற்றும் காவல்துறை இலச்சினைக்கு முன்பாகவே அவர் அநாகரீகமாகச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் சித்தராமையா, ராமச்சந்திர ராவைப் பணியிடை நீக்கம் செய்து நேற்று (ஜன. 19) இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, இந்த வீடியோக்கள் ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும், தனது நற்பெயரைக் கெடுக்கச் செய்யப்பட்ட சதி என்றும் ராமச்சந்திர ராவ் விளக்கமளித்த போதிலும், அரசு அதனை ஏற்கவில்லை.

ஏற்கனவே, இவரது வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ் கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது.